Quantcast
Channel: பாமரன்
Viewing all articles
Browse latest Browse all 103

இனிய கலைஞருக்கு….!

$
0
0


இனிய கலைஞருக்கு….!

இது எனது இரண்டாவது மடல்.
முதல் மடல் நினைவிருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு.
.
அது எனது கல்லூரிப் பருவத்தின்போது
தங்களது வருகைக்காகத் தவமிருந்து எழுதிய மடல்.
.
அன்று தங்களை நேசித்த லட்சக்கணக்கான
தமிழ் பேசும் மக்களில் ஒருவனாக நானும் இருந்தேன்.
.
அப்போது மட்டுமில்லை அதற்கும் முன்னர்
அவசரகால அடக்குமுறைகளின்போது
எங்கள் ஊர் மாநாட்டில் நீங்கள் :
.
“இந்தக் கொடுமைகளைக் கண்டித்து
இந்தியப் பிரதமருக்கு நாளையே
லட்சக்கணக்கான தந்திகள் பறந்தாக வேண்டும்.

எங்கே…..
இங்குள்ளவர்களில் எத்தனை பேர்
அனுப்பப் போகிறீர்கள்?
கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம்…”
.
எனச் சூளுரைத்தபோது உயர்ந்த
லட்சக்கணக்கான கரங்களில்
தந்தையுடனிருந்த பதினான்கு வயதுச் சிறுவனான
எனது கரமும் இருந்தது
இன்னமும் நினைவில்தான்….
.
அவசரகாலக் கொடுமைகளின்போது
கழகத்தவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம்
தணிக்கைக்குத் தப்பித்து முரசொலியில் வெளிவரும்
“அண்ணா சமாதிக்கு வர இயலாதவர்கள்
பட்டியலை”ப் பார்த்து கலங்கிய காலங்களும்
இன்னமும் நினைவில்தான்…
.
செத்தால்கூட கறுப்பு சிகப்பில்தான்
என் உடலைப் போர்த்த வேண்டும்
என நெருங்கியவர்களிடமெல்லாம்
நெக்குறுகக் கூறித்திரிந்ததும்
இன்னமும் நினைவில்தான்….
.
இருப்பினும் இனியவரே !
இடைப்பட்ட காலத்தில்
எப்படி ஏற்பட்டது நமக்குள் இடைவெளி…?

அதுவும்
இன்னமும் நினைவில்தான்…

“நிலையான ஆட்சிக்காக” நமது கழகம்
“நிலை” மாறியபோது
திசை மாறிய இளைஞர்களில் நானும் ஒருவன்.

இன்று அமர்ந்திருக்கும் அரியாசனம் பற்றியும்
அதிலிருந்து கொண்டு அப்படியொன்றும்
எம் மக்களது வாழ்க்கைக்கு விடிவினை
வரவழைத்துவிட முடியாது என்பது பற்றியும்
எம்மைக் காட்டிலும் தங்களுக்குத் தெரியும்.
.
அமர்ந்திருக்கின்ற அரியாசனம் அப்படி.
அதற்கான அதிகாரங்களும் அப்படி.
அமுலில் உள்ள அமைப்பும் அப்படி.
.
அப்படியானால் எப்படித்தான் விடியும்?
ஓட்டுச்சாவடிகளில் விடியாது
என்பதனைப் புரிந்து நாட்கள் பலவாயிற்று.
.
இருப்பினும் குறளோவியம் கொடுத்தவருக்கு குறளாய் ஒன்று :

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.”
.
புரியும் உங்களுக்கு.
நேரடியாகவே வருவோமே விஷயத்திற்கு.
.
உங்கள் சக்தி எமக்குப் புரியும்.
எனவே சொன்னதை செய்து முடிப்பீர்கள்
எனும் நம்பிக்கையில்…….
.
கஞ்சியோ கூழோ குடித்துக் காலத்தைத் தள்ளுகின்ற
கூடங்குளத்து மக்களை கூண்டோடு ஒழிக்க
கூட்டுத் தயாரிப்பில் தலை நீட்டுகின்ற
உலைகள் பற்றி உணர்வீர்கள்
.
”உண்மை நிலை அறிய “நிபுணர்” குழு
அமைப்போம்” என்ற அறிவிப்பினைக்
கேட்டதும் மகிழ்ந்து போனோம்.

ஆனால் அந்த “நிபுணர்” குழுவும்
அரசாங்க நிபுணர்களாக மட்டும் இருப்பின்
நமது வானொலிச் செய்திகளைப் போல
“பொய்கள் வாசிப்பதாகத்தான்” இருக்கும்.
.
தொலைக்காட்சியின் துடுக்குத்தனத்தை உணர்த்த
அதனை சுத்தியலால் சுக்குநூறாக
உடைத்துக் காட்டிய உங்களுக்கா இது தெரியாது?
.
மாற்றுக்கட்சிகள் மாநிலத்தில் ஆளும்போது
மத்திய அரசு மாற்றாந்தாயாகத்தான் இருக்கும் என்பது
மாநிலங்களின் சுய ஆட்சிக்காக அன்றே
அறைகூவல் விடுத்த உங்களுக்கா புரியாது ?
.
கலைக்கப்பட்ட கர்நாடக அரசு
கைகாவில் அணு உலைகள் அமைப்பது பற்றி
விவாதிக்க நாடு தழுவிய விவாதத்தை வைத்தது.
.
விவாதத்தை வைத்தது கர்நாடக அரசு.
விவாதத்தை வெறுத்தது இந்திய அரசு.
.
குளிரூட்டப்பட்ட அறைகளினுள்ளே
ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்த விஞ்ஞானிகள்
விவாதத்திற்காக வீதிக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
.
அக்கூட்டத்தில், ”ஆக்கபூர்வத்திற்கான” அணுசக்தி
என்பதனை வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும்கூட
“அரங்கேற” இருக்கும் அபாயங்கள் பற்றி
அவர்கள் மறுக்கவில்லை.
அத்துணை விலை கொடுத்து அபாயங்களைச்
சந்திக்கத்தான் வேண்டுமா என்றதற்கு
பதிலும் கூறவில்லை.
.
இருப்பினும் கலைஞர் அவர்களே !

இது வெறும் ஆபத்து பற்றிய பிரச்சனை மட்டுமல்ல.
ஆம்.
இது தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிராக
விஞ்ஞானம் போர்த்திய விவேக வலை.
.
இச்சதியில் இருந்து நம் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு
தங்களுக்கு உள்ளதனைத்
தாங்கள் மறுக்கவும் மாட்டீர்கள்,
மறக்கவும் மாட்டீர்கள்.
.
இனி இங்கிலாந்து பற்றிப் பார்ப்போமா?

இங்கிலாந்திலுள்ள செல்லாஃபீல்டு
அணு எரிபொருள் மறுபதன நிலையத்தை
விரிவாக்குவதா? என விவாதம் நடந்ததில்,
அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அந்நிலையத்தை விரிவாக்குவதை விடவும்
முடிவாக்குவதே சரியென பரிந்துரைத்துள்ளதனைத்
தங்கள் பார்வைக்குக் கொண்டு வருவது
பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறோம்.
.
பத்துமணி நேரத்திற்குள்
பல லட்சம் மக்களைத் திரட்டும் பலம்
உங்களுக்கு இருப்பதனை
நீங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஆட்சியைப் பிடிப்பதிலும் பின்னர்
அதனைத் தக்கவைத்துக் கொள்வதிலுமே
பெரும்பாலான பொழுதுகள் போயாயிற்று.
.
அந்தப் பதினாறுகளில் உங்களின் எழுத்துக்களுக்கும்
இந்த அறுபதுகளில் உங்களின் எழுத்துக்களுக்கும்
எத்தனை இடைவெளி……
இப்பொழுது இல்லாது போனது
எதுவெனப் புரிகிறதா உங்களுக்கு….?
.
காலக்குதிரையைத்தான் கழுத்தைத் திருப்ப விடுங்களேன்….
புரியும் உங்களுக்கு…..
.
அதுதான் ”அந்த அசாத்திய துணிச்சல்”.
.
தமிழகத்தின் மூலை முடுக்குகளையெல்லாம்
அறிந்து வைத்திருப்பீர்கள்.
அத்தோடு மட்டுமில்லை
அம்மக்களது பழக்க வழக்கங்களையும் கூடத்தான்….
அப்படிப்பட்ட உங்களுக்கா தெரியாது
கூடங்குளத்தில் அணு உலைகள் அபாயகரமானதென்று ?
.
இருப்பினும் முதல்வரே !
.
படுபாதக உலைகள் பல்லாயிரம் மக்களைப்
பலிவாங்கி விடுமென்று பாராளுமன்றத்தில்
வை.கோபால்சாமி முழங்கினாரே….
.
அதனைக் கழக ஏடு கொட்டை எழுத்தில்
கோடிட்டுக் காட்டியதே….
.
சாத்தான்குளத்தின் கழக வேட்பாளர்
”அணு உலைகளை அமைக்க விட மாட்டோம்” என
அடித்துச் சத்தியம் செய்தாரே….
.
ஆனால்…. இன்று….?
.
“சாதக பாதகம்” என்று நீங்களும்….
.
“புரளி கிளப்புபவர்கள்” எனக் கழக ஏடும்….
.
முறைதானா…. முதல்வரே….?
.
ஒருவேளை….
போக்கற்றவர்களின் பொழுது போக்கிடம்தான் பாராளுமன்றம்
எனப் புரியவைப்பதற்குத்தான் பேசியதோ பாராளுமன்றப் புலி?
.
சாத்தான்குளச் சத்தியவான் இதனையும்
சட்டமன்றச் சத்தியப் பிரமாணமாய் நினைத்து விட்டாரோ?
.
உங்கள் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும்
”தோழமை”க் கட்சிகளின் தொந்திரவும்
தெரியும் எமக்கு.
.
அத்தலைமைகளின் “நிலை”மையும்
தெரியும் எமக்கு.
.
இருப்பினும் முதல்வரே….!
இந்திப் பிரச்சனையிலிருந்து
ஈழப்பிரச்சனை வரையிலும்
தூர நின்ற “தோழமை”களா
தொந்தரவு தந்து விட முடியும்?
.
எனவே கலைஞர் அவர்களே….!
.
தமிழகத்தில் மட்டுமில்லை….
மற்ற தென் மாநிலங்களில்கூட
தலை நீட்டும் உலைகளைத் துரத்தியடிக்கும்
ஆற்றல் உங்களுக்குண்டு.
.
ஆகவே….
”நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என
அடிக்கடி நீங்கள் நினைவூட்டும்
அதே வரிகளைத்தான் நாங்களும்
நினைவூட்ட விரும்புகிறோம்.
.
ஆம்….
.
“அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றாலும்
தண்டவாளத்தில் தலை வைத்துப்படு என்றாலும்
தம்பி கருணாநிதி செய்து முடிப்பான்.”
என அண்ணா சொன்னார்.
.
இனிய முதல்வரே….!
.
நீங்கள்
தண்டவாளத்தில் தலையையும்
வைக்க வேண்டாம்.

கூடங்குளத்தில் உலையையும்
வைக்க வேண்டாம்

எனும் வேண்டுகோளோடு
விடை பெறுவது…….

………பாமரன்.

(1990 இல் வெளிவந்த எனது “புத்தர் சிரித்தார்” நூலில் இருந்து….)


Viewing all articles
Browse latest Browse all 103

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>